பக்கங்கள்

வியாழன், அக்டோபர் 23, 2008

வருமா மனிதநேயம்?

சமீபத்தில் தாம்பரம் செல்லும் சந்தர்ப்பம் அமைந்தது. அங்கு m500 பேருந்தில் ஏறினேன். அதில் 70 வயது மதிக்கத் தக்க ஒரு மூதாட்டி பேருந்தின் தரையில் மிகவும் சிரமத்துடன் அமர்ந்து இருந்தார். அவர் அமர்ந்து இருந்த இடத்தின் அருகில் கல்லூரி செல்லும் ஒரு இளம் பெண் அமர்ந்து இருந்தாள். நான் நினைத்தேன் சரி அப்பெண் மிகத் தொலைவு செல்கிறாள் போலும், எனவேதான் சீட்டில் இடம் தரவில்லை, இடி மன்னர்களின் தொந்தரவின் காரணமாக கூட அவ்வாறு செய்து இருப்பார் என்று நினைத்தேன். ஆனால், அப்பெண் ஒன்றரை கிலோ மீட்டர் கூட இல்லாத அடுத்த நிறுத்தத்தில் இறங்கியதை கண்டேன். பிறகு அவ்விடத்தில் அம்மூதாட்டி அமர்ந்து கொண்டார். இரண்டு கிலோ மீட்டர் கூட இல்லாத அப்பயணத்தில் ஒரு வயதானவர் சிரமப்படுவதைக் கண்டும் மனம் இறங்காத அப்பெண் எதிர் காலத்தில் தன் வாழ்க்கையை எப்படி நடத்தி செல்வார் என்ற கேள்வியும் என் மனதில் பிறந்தது. ஸஹ மனிதர்களிடம் சிறிதளவும் கருணை இல்லாத இப்பெண் பெண் சமூகத்தின் சாபம் என்றே கருதினேன். இது போன்ற எத்தனையோ பெண்களும் இருக்கிறார்கள். இவர்கள் குறைந்த பட்சம் வயதான, உடல் ஊனமுற்றோர் மற்றும் உடல் உபாதை உள்லோருக்கேனும் இடம் அளிக்க முன்வர வேண்டும். இவர்களிடம் மனித நேயம் மலர வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் இவர்களால் வளர்க்கப் படும் எதிர்கால சந்ததிகள் எவ்வளவு கொடூரமாக இருப்பார்கள் என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. இவர்களின் மனம் திருந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதை தவிர வேறு வழி தெரியவில்லை.

வியாழன், அக்டோபர் 02, 2008

அமைதி வேண்டுவோம்

கர்நாடகா, குஜராத், டெல்லி, திரிபுரா என்று நாட்டின் பல பகுதிகளிலும் குண்டு வெடிப்புகள் ஏற்பட்டு நம் நாடு கலாச்சாரத்தில் மட்டுமல்ல பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலாலும் ஒன்று பட்டுள்ளது. இடையறாத குண்டு சத்தம் சராசரி இந்தியனின் செவிகளையும், அரசின் செவியையும் செயலிழக்க செய்து விட்டது போலும். நம் நாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் பயங்கரவாதிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. ஆங்காங்கே குண்டு வெடிப்பைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவித்தாலும் குண்டு வெடிப்பு எதிர்பாராத பகுதிகளில் ஏற்படுகிறது. அரசாங்கத்தின் உளவுப் பகுதி இன்னும் விழிப்போடு செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் இவை தடுக்கப்படும்.

இத்தகைய அனேக குண்டு வெடிப்புகள் சமாதானம் என்ற பெயர் கொண்ட இஸ்லாத்தின் பெயரை கூறிக் கொண்டு புனித ரமலான் மாதத்திலும் செய்யப்பட இந்த குண்டு வெடிப்புகள் புனித இஸ்லாத்திற்கும், அதன் நிறுவனர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கும், இறைவனுக்கும் செய்யப்பட அவமதிப்பாகும். இத்தனை இஸ்லாமிய சகோதரர்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும். இஸ்லாமிய மதத்தின் முறையில் கூற வேண்டும் என்றால் இத்தகைய பயங்கரவாதிகளுக்கு எதிராக பத்வா தொடுக்க வேண்டும். இறைவனின் வேறு வடிவங்களை வங்கும் ஏனைய மதத்தினர் மீது அல்ல. இஸ்லாத்தின் பெயரை கூறி பயங்கரவாதத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக இஸ்லாமிய சகோதரர்கள் நடவடிக்கை எடுத்தால் அவர்கள் மீது ஏனைய மதத்தை சார்ந்தோருக்கு நம்பிக்கை பிறக்கும். அர்த்தமற்ற பயங்கரவாதம் ஒழியும் என எதிர்பார்க்கலாம். அரசும் அரசியல்வாதிகளும் சிறுபான்மை, பெரும்பான்மை என்று பேசி இத்தகைய கொடுமை தொடராத வண்ணம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.