பக்கங்கள்

வியாழன், அக்டோபர் 10, 2013

பள்ளி நினைவுகள்

     எவருக்குமே தன் இளமைக் கால நினைவுகளை அசைபோடுவது என்பது இனிய விஷயமே. பள்ளிக்கூடம் செல்லும் காலத்தில் நடந்த நிகழ்வுகளை அசை போட்டு அதனைப் பதிவு செய்ய உத்தேசித்துள்ளேன்.
     எனது கல்விக்கு உதவிய கல்வி நிறுவன்ங்கள் மூன்று. முதலாவதாக மதுரை மாநகராட்சியின் தொடக்கப் பள்ளி (5 ஆம் வகுப்பு வரை), அடுத்ததாக மகாகவி பாரதியார், (மூன்று/நான்கு மாத காலமே) பணியாற்றிய, மதுரையின் புகழ் பெற்ற சேதுபதி மேல்நிலைப் பள்ளி (12 ஆம் வகுப்பு வரை). மூன்றாவதாக பட்டப் படிப்பு  மதுரை சௌராஷ்ரா கல்லூரி.
     மதுரை மாநகராட்சிப் பள்ளியில் உரிய வயதிற்கு முன்னரே எனது பெற்றோர் சேர்த்து விட்டனர்.  Admission இல்லாமல் முதல் வகுப்பில் சேர்த்துக் கொண்டனர்.  நான் என் வீட்டில் குடி இருந்த மோகன் என்பவனு(ரு)டன் பள்ளி சென்று கொண்டு இருந்தேன்.  நான் இரண்டாம் வகுப்பு செல்லப் போகிறேன் என நினைத்துக் கொண்டு இருக்கையில், மோகனை மட்டும் இரண்டாம் வகுப்பிற்கு மாற்றினார்கள். என்னை மாற்றவில்லை. வீட்டில் வந்து அழுதேன். அப்பொழுதுதான் சொன்னார்கள், இனிமேல்தான் நீ ஒன்றாம் வகுப்புப் படிக்கப் போகிறாய் என்று.
     முதல் முதலாம் வகுப்பின் ஆசிரியை யாரென்று நினைவில்லை. முதலாம் வகுப்பின் ஆசிரியை “பஞ்சவர்ணம் டீச்சர்”. நல்ல உயரமாக இருப்பார்,  நன்றாகப் பாடம் நடத்துவார், அன்பாக இருப்பார். எங்கள் வீட்டின் வழியாகத்தான் அவர் வீட்டிற்கு செல்வார். ஓடி ஓடி சென்று “வணக்கம் டீச்சர்” சொல்வது சந்தோஷம் தந்தது, கால ஓட்டத்தில் வணக்கம் சொல்வது நின்று போனது.  அவர்கள் அணிந்து இருந்த வெள்ளி கொலுசு என் அம்மாவிற்கு நகைச்சுவையான விஷயம் (அவர்களின் உயரமான தோற்றத்திற்கு அது பொருத்தமில்லை என்பது அம்மாவின் எண்ணம். ம்ம்ம்.. பெண்களின் குணம் J )
     என் அண்ணன், மற்றும் வீட்டில் குடியிருந்த அனைவருக்கும் அதுதான் முதல் பள்ளி.
     தொடக்கப் பள்ளிக் காலத்தில் பாடிய கடவுள் வாழ்த்துப் பாடல்:
தேவே உன்னைப் போற்றிடுவேன், தினமும் என்னைக் காத்திடுவாய்
நாவால் உன்னை நான் பாட, நல்லத் தமிழை தந்திடுவாய்.


திங்கள், மார்ச் 18, 2013

வீரத் தாய் வேலு நாச்சியார்

             "வீரத் தாய் வேலு நாச்சியார்" என்ற நாட்டிய நாடகம், கடந்த சனிக் கிழமை (16-3-2013) அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நடை பெற்றது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்த்து வெற்றிக் கொடி நாட்டிய ஒரே அரசி என்ற அவரின் வாழ்க்கை சரித்திரம் நாட்டிய நாடகமாக நடத்தப்பட்டது. இதன் தயாரிப்பாளர் ம.தி.மு.க பொதுச் செயலாளர் திரு வைகோ என்பது குறிப்பிடத்தக்கது. 

             தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படத்தை வரைந்த திரு வேணுகோபால் சர்மாவின் புதல்வர், திரு ஸ்ரீ ராம் சர்மா, பல்வேறு ஆவணங்களின் அடிப்படையில் இதன் வசனம் மற்றும் கதை அமைப்பை ஏற்படுத்த, திருமதி மணிமேகலை சர்மா இதன் நடன அமைப்பை உருவாக்கி உள்ளார். வேலு நாச்சியார் சிவகங்கை சமஸ்தானத்தின் ராணியான,  அவர் கணவர் முத்து வடுகநாதர் ஒரு பிரதோஷ நாளில், இறைவனை வழிபட செல்லும்பொழுது, ஆங்கிலேய அதிகாரி கர்னல் பென்ஜோர் என்பவனால் கொல்லப்பட, தலைமறைவு வாழ்க்கை மேற்கொள்ளும் நாச்சியார்,  மருதிருவரின் துணையோடும், ஏனைய குறுநில மன்னர்களின் துணையோடும், ஹைதர் அலி தந்த போர்த் தளவாடங்களைக் கொண்டும் எட்டு ஆண்டுகளுக்குப் பின் தன்  தாய் மண்ணை மீட்டெடுத்து, கர்னல் பென்ஜோரையும் மன்னித்து, பின் தன்  மண்ணை நல்ல விதமாய் ஆண்ட கதை.
இதில் "உடையாள் " என்னும் தாழ்த்தப்பட்ட குலத்தை சேர்ந்த பெண்மணி, அரசியை காப்பாற்ற மாறு கை, மாறு கால் வாங்கப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு இறக்கிறார். பின்னர் பெண்களைக் கொண்ட படையை ஏற்படுத்தும் நாச்சியார் உடையாளின் பெயரை தன் படைக்கு சூட்டி அவருக்கு மரியாதை செய்கிறார். போரில் ஒரு பகுதியாக குயிலி என்னும் பெண் தன்  உடலில் எண்ணை ஊற்றி, தீ வைத்துக் கொண்டு ஆங்கிலப் படையினரின் தளவாடக் கிடங்கை நாசமாக்குகிறார். இவ்விரு கட்சிகளும் நெஞ்சை உருக்கும் விதமாக கட்சி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாராட்டத்தக்கது.

        நடனம் ஆடிய திருமதி மணிமேகலை சர்மா நல்ல முக பாவத்தைக் காட்டினர் பின்னால் ஒலித்தக் குரல்களும் பிரமாதமாய் இருந்தது. ஹைதர் அலி வரும் காட்சியில் நாகூர் ஈ.எம். ஹனிபாவின் குரலைக் கேட்டபின் அவரின் இறைவனிடம் கையேந்துங்கள் பாடல் இரு நாட்கள் மனதில் ரீங்காரம் இட்டுக் கொண்டு இருந்தது.

 
               இன்னும் காட்சி அமைப்பில் அழுத்தம் கொடுக்க  வேண்டும். கொரில்லாப் போர் முறையை முதன் முதலில் பாரதத்தில் அறிமுகம் செய்தது இவர் என்ற தவறான கருத்தை கொடுத்து இருக்கிறார்கள். இவருக்கு முன்னதாக வீர சிவாஜி அந்த முறையை உபயோகித்து உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. பிரிட்டிஷ் படையிடம் தோற்ற மன்னர்கள்/அரசிகள் பெயரே முன்னிறுத்தப் படுகிறது, இவர் போல் வெற்றி கொண்டவர்களின் கதை கூறப்படுவதில்லை என்பது வருத்தம் தருகிறது. வீர சாவர்கர் தன நூலில் மாவீரன் அலெக்சாண்டரை புருஷோத்தமன் வென்றான், அனால் அது மறைக்கப் பட்டுள்ளது என்று சொல்கிறார். இது நம் நாட்டு சாபக் கேடு போலும். வெற்றிக் கதைகள் கூறப் படுவதில்லை. தோல்வியே முன்னிறுத்தப் படுகிறது.
            இதில் முக்கிய கதாப் பாத்திரங்கள் தவிர பிறர் தில்லி நாடக மற்றும் நாட்டிய மாணவர்கள்/மாணவிகள் என்பதும் இரு நாள் பயிற்சியில் மிக அருமையான நாட்டியத்தை தந்தார்கள் என்பதும் அவர்களின் திறமையை கண்டு தலை வணங்க வைத்தது

              விழாவின் இறுதியில் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக வைகோ பேசியது மனதை கொள்ளை கொண்டது. "திரிபுரம் எரித்த திரிசடைக் கடவுள்" என்று அவர் சொன்னவுடன், சிவபெருமான் மீதிருந்த பக்தி மிகுந்தது என்பதே உண்மை.

         இந்த நாட்டிய நாடகம் தங்கள் பகுதியில் நடைபெற்றால் தவறாமல் பாருங்கள், நம் நாட்டின் வெற்றி சரிதத்தை அறியுங்கள்

திங்கள், நவம்பர் 26, 2012

மும்பைத் தாக்குதல் நான்காம் ஆண்டு

மும்பையில் தாக்குதல் நடைப் பெற்றத் தாக்குதலின் நான்காம் ஆண்டு இன்று.  இந்தத் தாக்குதலில் உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவோம்.  அப்பாவி மக்களின் ரத்தத்தை ருசி கண்ட கொடுங்கோலர்களில் ஒருவனான, நவீன ஹிட்லர் அஜ்மல் கசாப் ஒரு வழியாக தூக்கிலிடப் பட்டான்.  இந்திய அரசுக்கு இந்த நேரத்தில் நன்றியினை அறிவிக்க கடமைப்பட்டுள்ளோம் .

புதன், செப்டம்பர் 19, 2012

விநாயகர் பெருமை

கணபதி, கஜானன், ஆனைமுகத்தான் என்றெல்லாம் நம்மால் துதிக்கப்படும் பிள்ளையார் இன்று விநாயக சதுர்த்தி நன்னாளில் நாடெங்கிலும் வணங்கப்படுகிறார்.  குறிப்பாக மகாராஷ்ட்ரத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  அவரவர் வீட்டில் நன்றாகக் கொண்டாடப்பட்டு வந்த விநாயக சதுர்த்தி விழாவினை மரியாதைக்குரிய திலகர் பெருமான் ஆங்கிலேயருக்கு  எதிராக பாரத மக்களை, குறிப்பாக ஹிந்துக்களை திரட்டுவதற்காக இத் திருவிழாவினை சமூகத் திருவிழாவாக 1900 களில் நடைமுறைப்படுத்தினார்.  
பிடித்து வைத்தால் பிள்ளையார் என்பதாக மிகவும் எளிமையான இறை. வயல்காடுகளில் பணி துவங்குகையில், அங்கே இருக்கும் சாணத்தைக் கொண்டு கூட பிள்ளையார் என பிடித்து வைத்து பூசிப்பதுண்டு. அதனில் சொருகப்படும் அருகம்புல்லினால், அச் சாணி கெடாது இருக்கும். அனைவர் வீட்டிலும் பிற தெய்வங்களுக்கு பூஜை செய்யும் சமயத்தில் மஞ்சளில் பிள்ளையார் செய்து அவர் அனுமதி பெற்றே முக்கிய பூஜை  துவங்கும்.  எத்தகைய எளிய ஓவியத்திலும் சிறப்பாய் விளங்கிடும் தெய்வம், கம்ப்யூட்டர் யுகத்தில் வித விதமாய் ஓவியங்கள் வருகின்றன. விநாயகர் கம்ப்யூட்டர் இயக்குவது போன்றெல்லாம், அதே போல் வித விதமாய் சிலைகளும்.

தமிழகத்தில், வாதாபி மீது படை எடுத்து வந்த பரஞ்சோதி என்பார் தமிழகத்தில் விநாயக வழிபாடு  கொணர்ந்தார் எனவும், அதன் காரனமைத்தன் வாதாபி கணபதிம் பஜேஹம் என்ற பாடல் உள்ளதாக ஒரு வாதம் உண்டு. ஆனால் அதற்கும்  முன்னதாகவே தமிழகத்தில் வழிபாடு நடந்துள்ளது என்பதற்கு பிள்ளையார்பட்டி விநாயகர் சாக்ஷி, சுமார் 2  அல்லது 3  ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட சிலை என்பது, (அதன் கீழ் சிற்பியின் கையெழுத்துப் பொறிக்கப் பட்டுள்ளது என்பதும் அங்கே இரு கையுடன், ஜடாமுடியுடனும் சிவ லிங்கத்தை வழிபடுகிறார் என்பதும்  சுவாரசியமான தகவல்கள்) .  ஆனால் வேத காலத்தில் விநாயக வழிபாடு இல்லை, என்பது வியக்க வைக்கும் தகவல். ஆதி சங்கரரின் பஞ்சாயதன வழிபாட்டில், இடம் பெறும் சோனபத்ரம்   அவருக்குரியது.

விநாயகரின் தலை யானை, உடல் மனிதன் (உடல் பூத வகை  என்று சொன்னால்  பஞ்ச பூதங்களால் ஆன எனப் பொருள் கொள்ள வேண்டும்)
அவர்  வாஹனம்  மூஞ்சூறு எனப்படும்  எலி வகை. பாலூட்டி  வகையில் நிலத்தில்  வாசிப்பதில் பெரியது யானை, சற்று நடுத்தரமான உருவம் மனிதன் மற்றும் சிறிய உருவம் எலி. எனவே  விநாயகரின் வடிவு தாய்மையின் வடிவம் என்பதாலே, தாய்க்கு முதலிடம் கொடுக்கும் ஹிந்துக்கள், கணேசருக்கும்    முதலிடம் கொடுத்துள்ளார்கள்.


பெரும்பாலான நூல்களில் அவர் வழிபாட்டு செய்யுள் இடம் பெறும். அவருக்கென விநாயகர் அகவல் ஒளவையாரால் பாடப்பட்டுள்ளது. அது முழுவதும் யோக சாஸ்திரத்தை குறிப்பதாக உள்ளது. அவருக்கு தமிழகத்தில் சிறப்பாக பிள்ளையார்பட்டி, திருச்சி, கோவை, புதுவை ஆகிய ஊர்களில் தனிக் கோயில்கள் உள்ளன. மதுரையில் இருக்கும் முக்குறுணி (1  குறுணி என்பது 6 படி) விநாயகருக்கு 18  படி அரிசி கொண்டு கொழுக்கட்டை படைப்பர், அது ஒரு வாரம் முன்னரே அடுப்பில் ஏற்றப்படும். நம்மில் நிறைந்திருக்கும் ஞானத்தை, மாயை மறைத்து இருக்கிறது என்பதன் குறியீடே கொழுக்கட்டை. (பூரணம் ஞானம், மாவு மாயை.)  18  என்ற எண்ணின் சிறப்பிற்கு கீதையின் அத்தியாயம் ஒன்றே தற்பொழுது போதுமானது. 

 இன்னும் விரியும்.....

செவ்வாய், செப்டம்பர் 11, 2012

இன்று.....11/9

இன்று அதாவது September 11 ல் மூன்று முக்கிய நிகழ்வுகள் உண்டு. அவற்றில் காலவரிசைப்படி முதலில் நம் நாட்டின் பெருமையை உலகறிய செய்தார் ஒரு ஞானி, ஒரு மாமனிதரை தமிழுலகும், பாரதமும் இழந்தது, தன் அழிவினை நோக்கி சென்று கொண்டு இருக்கும் தீவிரவாதத்தின் மிகப் பெரிய தாக்குதல்.