பக்கங்கள்

சனி, நவம்பர் 26, 2011

மும்பை தாக்குதல் - மூன்றாம் ஆண்டு

   பாரதத்தின் வணிகத் தலைநகரமான மும்பையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தீவிர வாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான நம்  தேச  மற்றும் பிற தேச சகோதர சகோதரிகள் அனைவரின் ஆன்மாவும் சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம். 

     தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் உயிருடன் பிடிபட்ட கசாபிற்கு இதுவரை மரண தண்டனை வழங்கவில்லை  என்பது அதில் பாதிக்கப்பட்ட எண்ணற்ற குடும்பங்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். கால தாமதமான தண்டனையினால்  குற்றம்  செய்தவர் மீது மக்களுக்கு அனுதாபத்தை ஏற்படுத்தலாம்.  இப்பொழுதே மனித உரிமை பேசும் (தீவிரவாதிகளின்) நண்பர்கள் இன்னும் காலம் கடந்து விட்டால் மக்களின் மறதியை நன்றாக பயன் படுத்திக் கொண்டு அவனின் உயிரைக் காக்க பதாகை ஏந்தி வலம் வந்து வளம் காண்பார்கள். மனித உரிமை பேசுவோர் அவனின் வாழ்கையை எண்ணிப் பார்க்கவேண்டும் என்பர், அவர்கள் தங்கள் அனுதாபத்தை சற்று  பலியான அந்த குடும்பத்திடம் காட்டினால் தாக்குதலில்  இறந்தவர்கள் ஆன்மா சற்றேனும் அமைதியுறும். 

             நீதி மன்ற நடவடிக்கையினை  விரைவுப் படுத்தி, இதுவரை தன் தவறுக்கு சற்றும் மனம் வருந்தாத  கசாபிற்கு, மரண தண்டனை நிறைவேற்றப் பட்டாலே, இது போன்ற தவறு செய்ய விழையும் ஏனைய தீவிர வாதிகளுக்கு ஒரு பாடமாய் அமையும்.  தன் உயிரை இன்னுயிராய் நினைத்து இதுவரை வந்த  எந்த தலைவர்களும் தீவிரவாதிகளின் மரண தண்டனையினை நிறைவேற்ற வகை செய்ய  கருணை மனுவினை தள்ளுபப்டி செய்யாமல் காலம் கடத்தி வந்துள்ளார்கள்.  இந்திய இறையாண்மையின் சின்னமான பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத தலைவன் அப்சல் குருவிற்கே, மரண தண்டனை நிறைவேற்றவில்லை என்னும் பொழுது,மும்பை சத்ரபதி சிவாஜி முனையத்தில் அப்பாவி மக்களின் உயிர்களை பறித்த இந்த கொலைகாரப் பாவிக்கு எப்பொழுது தண்டனை தருவார்கள்? பிற உயிர்களை எடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை என்று வறட்டு வேதாந்தம் பேசிக் கொண்டு , தவறு செய்யும் மாக்களை தண்டிக்காத தலைவர்கள் 'செய்தக்க செய்யாமை யானும் கெடும்' என்ற தமிழ் மறையின் கூற்றினை  நினைவில் கொண்டு கசாபினைக்  கூற்றுவன் கொள்ளச் செய்ய வேண்டும்.

       ' परित्राणाय साधूनां विनाशाय चादुष्क्रुतां '  'பரித்ராணாய சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்' என்ற கண்ணனின் மொழியினை துணைக்கொண்டு இது போன்ற கலியுக அரக்கர்களை வதம் செய்வது அவசியம்.  இதனில் அரசு விரைவாய் செயல்பட்டு, மரண தண்டனையினை, கசாப் விரும்பினால், இஸ்லாமிய முறையில் நிறைவேற்றி, விரைவில் நற்பெயரை  எடுக்க, இறைவன் அருள் புரியட்டும்.