பக்கங்கள்

திங்கள், ஜூலை 23, 2012

கங்கையின் புனிதம் எங்கே?

   சமீபத்தில்  கோடங்கி  என்னும் வலைத்தளத்தில் சீனர்கள் காறித்துப்பிய இந்தியா  என்னும் கட்டுரையினைப் படிக்க நேர்ந்தது. தலைப்பைப் பார்த்ததுமே நம் தேசத்தைக் கேவலப்படுத்தும் கட்டுரையா என்று மனம் கொதித்தது.  கட்டுரையில் கண்ட புகைப்படங்களும் அவர் கொடுத்து இருந்த சீனரின் வலைப்பூவில்  ப்ளாக்ஸ்பாட்டில் இருந்த புகைப்படத்தையும் கண்ட பின்னர், உன் முதுகில் அழுக்கு இருக்கிறது என்று சொல்பவரிடம் உன் முதுகில் எவ்வளவு அழுக்கு இருக்கிறது என்று திருப்பிக்  கேட்காமல் நம் முதுகு அழுக்கினை எடுக்க முயற்சி எடுக்க வேண்டும் எனத் தோன்றியது.   

           திரு இக்பால் செல்வன் அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள புகைப்படங்களே போதுமானவை என்றாலும், சீனரின் முகவரியும் கொடுத்துள்ளேன். இரண்டாவதுப் புகைப் படங்களை (சீன முகவரியை) பலவீனமான மனமுடையவர்கள் தவிர்க்கவும்.

         நான் இந்து தர்மத்தை சிறந்த சமயமென மதிப்பவன், இந்த கருத்தில் என்றும் மாற்றம் இல்லை.  நாம் சுற்றுச்சூழலை பாதிக்கும் கங்கை நதியில் பிணங்களை எறியும் இந்த கொடிய வழக்கத்தை என்று ஒழிக்கப் போகிறோம் என்பதுதான் இங்கு நான் விவாதத்திற்கு வைக்க விரும்பும் கருத்து.  எத்தனையோ மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் இந்து தர்மத்தில் இந்த மாற்றத்தையும் ஏற்று,  இதற்கு  ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். வேற்றுநாட்டார் நம்மைக் குறித்து தவறாக எழுதிவிட்டார் என்றுப் பார்ப்பதை விட, நம்மை சரி செய்து கொள்ள இது ஒரு சந்தர்ப்பம் என நினைக்கிறேன். 

பள்ளியில் சொல்லித் தரவேண்டிய சுற்றுச்சூழல் கல்வியை மதமும் (இதில் எல்லா மதத்திற்கும் பங்கு உண்டு.) எனினும், இந்து மதத்திருக்கு தலையாய கடமை இருக்கிறது. கங்கா மாதா என்று வணங்கி போற்றும் கங்கை நதியில் நாம் செய்யும் அசுத்தத்தை நிறுத்துவதே, இப்பொழுது நம் முன் முக்கியக் கடமையாக இருக்கிறது.  இதனை சமயாசாரியர்கள் ஒரு இயக்கமாகவே செயல்பட்டு கங்கையின் புனிதத்தை மீட்க வேண்டும். தேவையெனில், இவ்வாறு பிணங்களை கங்கையிலும் இன்ன பிற நதியிலும் இடுவது பஞ்ச மகா பாவங்களில் ஒன்று என அறிவிக்கவும் தயங்கக் கூடாது.

இதனை எவரேனும் ஆங்கிலம் மற்றும்  ஹிந்தியில்  மொழி பெயர்த்து தங்கள் வலைப்பூவிலோ, முகநூலிலோ பதிவிட்டாலும் எனக்கு சம்மதமே,
இத்தகவலை வெளியிட்ட திரு இக்பால் செல்வன் அவர்களுக்கு என் நன்றி.