பக்கங்கள்

வியாழன், அக்டோபர் 23, 2008

வருமா மனிதநேயம்?

சமீபத்தில் தாம்பரம் செல்லும் சந்தர்ப்பம் அமைந்தது. அங்கு m500 பேருந்தில் ஏறினேன். அதில் 70 வயது மதிக்கத் தக்க ஒரு மூதாட்டி பேருந்தின் தரையில் மிகவும் சிரமத்துடன் அமர்ந்து இருந்தார். அவர் அமர்ந்து இருந்த இடத்தின் அருகில் கல்லூரி செல்லும் ஒரு இளம் பெண் அமர்ந்து இருந்தாள். நான் நினைத்தேன் சரி அப்பெண் மிகத் தொலைவு செல்கிறாள் போலும், எனவேதான் சீட்டில் இடம் தரவில்லை, இடி மன்னர்களின் தொந்தரவின் காரணமாக கூட அவ்வாறு செய்து இருப்பார் என்று நினைத்தேன். ஆனால், அப்பெண் ஒன்றரை கிலோ மீட்டர் கூட இல்லாத அடுத்த நிறுத்தத்தில் இறங்கியதை கண்டேன். பிறகு அவ்விடத்தில் அம்மூதாட்டி அமர்ந்து கொண்டார். இரண்டு கிலோ மீட்டர் கூட இல்லாத அப்பயணத்தில் ஒரு வயதானவர் சிரமப்படுவதைக் கண்டும் மனம் இறங்காத அப்பெண் எதிர் காலத்தில் தன் வாழ்க்கையை எப்படி நடத்தி செல்வார் என்ற கேள்வியும் என் மனதில் பிறந்தது. ஸஹ மனிதர்களிடம் சிறிதளவும் கருணை இல்லாத இப்பெண் பெண் சமூகத்தின் சாபம் என்றே கருதினேன். இது போன்ற எத்தனையோ பெண்களும் இருக்கிறார்கள். இவர்கள் குறைந்த பட்சம் வயதான, உடல் ஊனமுற்றோர் மற்றும் உடல் உபாதை உள்லோருக்கேனும் இடம் அளிக்க முன்வர வேண்டும். இவர்களிடம் மனித நேயம் மலர வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் இவர்களால் வளர்க்கப் படும் எதிர்கால சந்ததிகள் எவ்வளவு கொடூரமாக இருப்பார்கள் என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. இவர்களின் மனம் திருந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதை தவிர வேறு வழி தெரியவில்லை.

வியாழன், அக்டோபர் 02, 2008

அமைதி வேண்டுவோம்

கர்நாடகா, குஜராத், டெல்லி, திரிபுரா என்று நாட்டின் பல பகுதிகளிலும் குண்டு வெடிப்புகள் ஏற்பட்டு நம் நாடு கலாச்சாரத்தில் மட்டுமல்ல பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலாலும் ஒன்று பட்டுள்ளது. இடையறாத குண்டு சத்தம் சராசரி இந்தியனின் செவிகளையும், அரசின் செவியையும் செயலிழக்க செய்து விட்டது போலும். நம் நாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் பயங்கரவாதிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. ஆங்காங்கே குண்டு வெடிப்பைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவித்தாலும் குண்டு வெடிப்பு எதிர்பாராத பகுதிகளில் ஏற்படுகிறது. அரசாங்கத்தின் உளவுப் பகுதி இன்னும் விழிப்போடு செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் இவை தடுக்கப்படும்.

இத்தகைய அனேக குண்டு வெடிப்புகள் சமாதானம் என்ற பெயர் கொண்ட இஸ்லாத்தின் பெயரை கூறிக் கொண்டு புனித ரமலான் மாதத்திலும் செய்யப்பட இந்த குண்டு வெடிப்புகள் புனித இஸ்லாத்திற்கும், அதன் நிறுவனர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கும், இறைவனுக்கும் செய்யப்பட அவமதிப்பாகும். இத்தனை இஸ்லாமிய சகோதரர்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும். இஸ்லாமிய மதத்தின் முறையில் கூற வேண்டும் என்றால் இத்தகைய பயங்கரவாதிகளுக்கு எதிராக பத்வா தொடுக்க வேண்டும். இறைவனின் வேறு வடிவங்களை வங்கும் ஏனைய மதத்தினர் மீது அல்ல. இஸ்லாத்தின் பெயரை கூறி பயங்கரவாதத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக இஸ்லாமிய சகோதரர்கள் நடவடிக்கை எடுத்தால் அவர்கள் மீது ஏனைய மதத்தை சார்ந்தோருக்கு நம்பிக்கை பிறக்கும். அர்த்தமற்ற பயங்கரவாதம் ஒழியும் என எதிர்பார்க்கலாம். அரசும் அரசியல்வாதிகளும் சிறுபான்மை, பெரும்பான்மை என்று பேசி இத்தகைய கொடுமை தொடராத வண்ணம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வியாழன், ஜூன் 26, 2008

நட்பு

போர்களத்தில் நண்பன் படுகாயமுற்றான் என ஒரு போர்வீரனுக்கு தகவல் வருகிறது. தன் நண்பனை போர்களத்தில்இருந்து அழைத்து வர கிளம்புகின்றான். அவன் தலைவன் சொல்கின்றான் உன் நண்பன் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை, நீ செல்வது பயனற்றது என்றான். ஆனால் அவன் தன் நண்பனை அழைத்து வர போர்க்களம் சென்று, அவனை எடுத்து வந்தான் பிணமாக. தலைவன் சொன்னான் நான் சொன்னது சரியாயிற்றா நீ சென்றது வீண்தானே என்றான். போர்வீரன் சொன்னான், இல்லை நான் சென்றது வீணாகவில்லை. என் நண்பன் என்னை கண்டதும் நீ வருவாய் என எனக்கு தெரியும், நன்றி என்று சொல்லித்தான் மரித்து போனான் என்றான். இக்கதையினை எனது நண்பர் திரு சீனிவாசன் (Shalom Mansion) அவர்கள் அனுப்பினார்கள்.

செவ்வாய், ஜூன் 24, 2008

அன்பும் ஆத்திரமும்

என் நண்பர் திரு சுதர்சனன் அவர்கள் கூறிய SMS சிறுகதை இது.

புதியதாக கார் ஒன்றை வாங்கிய ஒருவன், வண்டி வாங்கிய இரு தினங்கள் கழித்து தன் புது வண்டியினை ஆசையுடன் துடைத்துக் கொண்டிருக்கும் பொழுது அவன் மகன் சந்தோஷ கூச்சலிட்டுக் கொண்டே வண்டியின் அடுத்த பக்கம் செல்கிறான். சிறிது நேரம் கழித்து அப்புறத்தில் இருந்து க்ரீச் க்ரீச் என சப்தம் வருவதை கேட்டு வண்டியின் அடுத்த பக்கம் சென்று பார்க்கையில் மகன் வண்டியில் spaner ஐ வைத்து கீறிக் கொண்டு இருக்கிறான். ஆத்திரத்துடன் அவன் கையில் உள்ள spaner ஐ கொண்டே அவன் கையில் அடித்து விட, கை வீக்கம் கண்டு விட்டது என்று டாக்டரிடம் அழைத்து செல்கிறான். மகன் வலியால் அவதி படுகின்றான். அதனை காண மனம் பொறுக்காமல் வருத்தத்துடன் மருத்துவமனை விட்டு வெளியேறி, வெளியில் நிறுத்தி இருக்கும் வண்டியில் மகன் என்ன கிறுக்கியிருக்கிறான் என்று பார்க்க அதில் எழுதி இருந்தது, "I LOVE U DAD".

(கதைக்காக படம் நெட்டில் சுடப்பட்டது)

வியாழன், ஜூன் 19, 2008

எண்ணச்சிறகு

எண்ணச்சிறகு என்பது எனது எண்ணங்களின் அணிவகுப்பாய் அமையும். இதனில் நாட்டு நடப்பு உலக நடப்பு போன்றவற்றில் என் பார்வையை பதிவு செய்ய எண்ணுகின்றேன். உங்களின் கருத்தையும் ஆலோசனையையும் எதிர்பார்க்கின்றேன். என் கருத்து பதிவில் ஏதேனும் குறைகள் இருந்தாலும் அதனை சுட்டிக் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். ஆரோக்யமான விவாதத்திற்கு இத் தளம் உதவுமேயானால் அது போன்ற நல்ல விஷயம் எது இருக்க முடியும்?