இந்தக் கதை மகா பாரதத்தில் வருகிறது என்று இக்கதையை எங்கோப் படித்தேன். உலகில் அதிகமான இடைச்செருகல், மற்றும் இதில் உள்ளது எனக் கூறி பல்வேறு குட்டிக் கதைகள் இருப்பது பாரதத்திற்குத்தான். அது போல் இதுவும் ஒன்று. ஆனாலும் எதோ ஒரு கருத்தை உணர்த்துவது போல் இருந்தது. இதோ கதை.

ஒரு முறை பீமனும் கண்ணனும் ஒரு காட்டு வழியில் சென்று கொண்டு இருந்தார்கள். இரவு நேரம் வந்தது. இரவுப் பொழுதில் முதல் பகுதியில் பீமனும், இரண்டாம் பகுதியில் கண்ணனும் காவல் காப்பது என முடிவு செய்யப் பட்டது. கண்ணன் கண் வளர்கையில், பீமனிடம் ஒரு பிரம்ம ராக்ஷசன் (தான் கற்றக் கல்வியினை பிறருக்குக் கற்றுத் தராத பிராமணனே பிரம்ம ராக்ஷசன் ஆகிறான் என்பது நம்பிக்கை). வந்து என்னோடு சண்டையிடு என்று பீமனை அழைத்த அவன், விரற்க்கடை அளவே இருந்தான்.
பீமன் கோபம் கொண்டு உன்னோடு நான் சண்டையிடுவதா என்றவுடன், அவன் வளர ஆரம்பித்தான். அவனோடு பீமன் சண்டையிட, சண்டையிட அவன் அளவு கூடிக் கொண்டே சென்றது. சண்டையில் முடிவு ஏதும் ஏற்படவில்லை. தூங்குபவரை அந்த பிரம்ம ராக்ஷசன் ஒன்றும் செய்ய மாட்டன் என்பதால் கண்ணனுக்கு இல்லைப் பிரச்னை.
அடி தாங்க முடியவில்லை பீமனுக்கு. பொறுப்பை மாற்றும் நேரம் வந்தது. கண்ணனை எழுப்பி விட்டு அவன் படுத்து விட்டான். கண்ணன் பார்க்கையில் மிக உயர்ந்தும் பலவானாகவும் இருந்தான் பிரம்ம ராக்ஷசன். அவன் கண்ணனை போருக்கு அழைத்தான். கண்ணன் சொன்னான், நீ எவ்வளவு பலம் வாய்ந்தவன் உன்னிடம் சண்டையிடும் சக்தி இல்லாதவன் நான் என்றான். அவனை பலவான் என்றுப் புகழ்ந்த உடனேயே அவன் பலம் சற்று குறைய ஆரம்பித்தது.
.jpg)
அப்பொழுதும் அவன் பரந்தாமனை அழைத்தான் யுத்தத்திற்கு. கண்ணன் அசரவில்லை, எவனைப் புகழ்ந்தால் கிட்டததேல்லாம் கிட்டுமோ அவன் இவனை புகழ்ந்தான். புகழப் புகழ அவன் பலம் குறைந்தது. வந்த அளவை விட சிறியதான பின் அவனை நசுக்கிக் கொன்று தன பதம் சேர்த்துக் கொண்டான் அந்த மாயன். பின்னர் கண்ணனும் பீமனும் காட்டை விட்டு வெளியே சென்றனர் என முடிகிறது அந்தக் கதை.
.jpg)
இந்தக் கதை குறித்து என் சிந்தை இவ்வாறாய் சென்றது. நாமே பீமன். கண்ணன் நம்முள் உரை இறைவன். காடென்பது நம் வாழ்வு. இரவு நம் அறியாமை. கண்ணன் ஆகிய இறைவன் நம்முடனே இருக்க, பீமனைப் போல் தன் முனைப்பாய் பொறுப்பை எடுத்து நடத்துகிறோம் நானே முதலில் என்று. எத்தனையோ இடையூறு மற்றும் அகந்தையே பிரம்ம ராக்ஷசனாய் வடிவெடுத்து வருகிறது. அதை அழிக்க கோபம், சூது என என்னென்னமோ செய்கிறோம். விழுந்த அடியினால் மரணமில்லை ஆனாலும் வலிக்கிறது. பொறுப்பை இறைவனிடம் கொடுத்து, இறை உணர்வோடு நம் பணியினை செய்தால் செயல் செய்யும் சரீரமே நமது நடத்துவது அவன் அல்லவா? ஒதுங்கி விட்டால், இடும்பைக்கு இடும்பை கொடுத்து அனுப்பிடுவான், நம்மை காத்தலும் செய்திடுவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக